நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின்னர்  9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்காமல் கால தாமதப்படுத்தி வந்த நிலையில், அதைப் புறந்தள்ளி ஆணையத்தை அமைத்து  அதன் உறுப்பினர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர்  குமாரசாமி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தை முற்றிலும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ள குமாரசாமி இது தொடர்பாக எந்த சட்ட பிரச்சனையையும் சந்திக்க தயார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..

அதன்படி. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராரக ஏ.எஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ். கே.பிரபாகர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

புதுச்சேரிமாநிலத்தின் சார்பில் பகுதி நேர உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலர் கே. அன்பரசு, கேரள மாநிலம் சார்பில் பகுதி நேர உறுப்பினர்களாக டிங்கு பிஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் சார்பில் இது வரையில் பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.