காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் எந்தவித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு இணங்க கூடாது என்றும் துளி அளவு கூட தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என கடந்த மாதம் 16 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைப்பது சாத்தியமற்றது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து  ஆலோசிப்பதற்கான கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக தமிழக தலைமைச் செயலாளர் சிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித்துறைச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் இன்று  நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு  பிப்ரவரி 22- இல் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வேறு எவ்வித இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்து கட்சிகள் - விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிகைகையில் தெரிவித்துள்ளார்.