காவி விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என்றும், தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யுமறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான  வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், மத்திய அமைச்சரைவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மீண்டும் பழைய பல்லவியைப் பாடியுள்ளார். அதே நேரத்தில் வரும் 14 ஆம் தேதி இது தொடர்பாக வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீருக்காக காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு, மத்திய அரசுக்குமே ஆதரவாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்னர்.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என்றும் அவர் கூறினார். காவிரி வழக்கு தமிழகத்துக்கு நல்ல முடிவை தரும் நிலையை எட்டியுள்ளதாகவும், தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.