ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகிய இரண்டையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம், கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், இந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்படுகின்றன. இன்றைய விசாரணையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தெளிவான விளக்கத்தை உச்சநீதிமன்றம் கொடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. அதற்கு உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசத்தில் மத்திய அரசு, தீர்ப்பை நிறைவேற்றததால், கூடுதல் அவகாசம் வழங்கப்பட கூடாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்படும்.

இன்றைய விசாரணையில் காவிரி விவகாரத்தில் தீர்வு கிடைக்குமா என தமிழக விவசாயிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.