காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இது வரை அதற்கான சிறிய அறிவிப்பைக் கூட மத்திய அரசு  வெளியிடவில்லை. தமிழகமே கொந்தளித்துப் போயுள்ள  தமிழக அரசு இன்று என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பில்  காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பாக கூறிவிட்டது.

இந்த உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான செயல் திட்டத்தை 6 வாரங்களின் முடிவு நாளான இன்றைக்குள்  மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

மத்திய அரசிள் இந்த பாராமுக நடவடிக்கையால் தமிழக மக்களும், விவசாயிகளும் கொந்தளித்துப் போயுள்ளனர். சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதையொட்டி, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம், இன்று தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தலைமைச் செயலகத்தில் பழைய அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் இந்த கூட்டம் காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் அதன் தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால், சட்டப்பூர்வமாக மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய வழிவகை உள்ளது. அதன்படி, அடுத்தகட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.