Asianet News TamilAsianet News Tamil

மோடி அரசின் மொள்ளமாரித்தனத்தை தட்டிக் கேட்க வக்கில்லாமல் ஜால்ரா போடும் எடப்பாடி.. கொந்தளித்த ஸ்டாலின்..!

இந்த தாமதத்தைக் கூட தட்டிக் கேட்க வக்கில்லாமல், மத்திய பாஜக அரசுடன் மாநிலத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தது இங்குள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned
Author
Tamil Nadu, First Published Apr 29, 2020, 12:21 PM IST

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவருவதா? இது தமிழத்தின் ஜூவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்;- "தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய பாஜக அரசு கொண்டு வந்து ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசு, தற்போது இந்த காவிரி ஆணையத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது அநீதியானது.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டிஎம்சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரைக் கோட்டை விட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த காவிரி மேலாண்மை வாரியத்தையும் கை நழுவவிட்டது.16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து, அதன் அடிப்படையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துவதற்கு ஒரு வரைவுத் திட்டத்தை ஆறு வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், பல்வேறு காரணங்களைச் சொல்லி, அந்த காவிரி இறுதி வரைவுத் திட்டத்தை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் எழுச்சி காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், ஒருவழியாக 18.5.2018 அன்று காவிரி வரைவுத் திட்டத்தை அறிவித்தது மத்திய பாஜக அரசு.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

இந்த தாமதத்தைக் கூட தட்டிக் கேட்க வக்கில்லாமல், மத்திய பாஜக அரசுடன் மாநிலத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தது இங்குள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.காவிரி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்; உப்புச்சப்பில்லாத, உதவாக்கரையான, ஒரு பல்லில்லா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க அதிமுக அரசு மத்திய பாஜக அரசுக்கு மனமுவந்து ஒப்புதல் கொடுத்தது. அத்துடன் பாஜக அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் சகல அதிகாரங்களும் பெற்ற அமைப்பை உருவாக்கி விட்டோம் என்று முதல்வர் பழனிசாமியே வாதிட்டு, தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டார்.

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் திமுகவின் சார்பில் சட்டப்பேரவையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மக்கள் மன்றத்தில் எல்லாம் சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் நிராகரித்து, அதிகாரம் பெற்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று பொய்வாதம் செய்து பொழுதைப் போக்கினார் முதல்வர் பழனிசாமி. பொம்மை அமைப்பாக அமைக்கப்பட்ட இந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே பொறுப்புத் தலைவராக நியமித்து இன்று வரை மத்திய பாஜக அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவோ, தமிழ்நாட்டின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் கூடிக் கலையும் அமைப்புகளாகவே இன்று வரை இருந்து வருகின்றன.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, இந்த உரிமைப் பறிப்பு வைபவங்களை எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து, மத்திய பாஜக அரசுக்குப் பவ்வியமாக, பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. வெறும் எலும்புக்கூடு அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பாஜக அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

கருணாநிதி தலைமையிலான திமுக அரசு நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்து வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழகம் பெற்றும், மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர் என்ற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தமிழ்நாட்டுக்கு மத்திய பாஜக அரசு முன்மொழிய அதை வழிமொழிந்து, விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் விவசாயி புகழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அதிமுக அரசு செய்திருக்கிறது.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து, அது தன்னாட்சி அமைப்பு அல்ல, மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட கைகட்டி நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்! காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்! தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020 ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது.

Cauvery Authority comes under Jal Shakti Ministry...mk stalin Condemned

இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios