காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை
என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 6 மணியளவில் ஆளுநர் புரோகித், செய்தியாளர் சந்திப்பு நடந்து வருகிறது. 

நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார். காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த ஆளுநர் மாநாட்டின்போது காவிரி விவகாரம் குறித்து தாம் வலியுறுத்தி பேசியதாகவும் அப்போது தெரிவித்தார். குடியரசு தலைவர், பிரதமர் முன்னிலையில் காவிரி ஒழுங்காற்று வாரியம், காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தினேன். இது குறித்து நிதின் கட்கரியிடமும் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.