உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது  தொடர் கதையாகிவிட்டது என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலைக்கு 3 பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என அவரது செல்போனில் சிக்கிய ஆதாரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பாத்திமா லத்தீப் என்ற சமூகவியல் துறை பயிலும் முதுகலை மாணவி திடீரென தற்கொலை செய்து இறந்து போனார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய காவலர்கள் சென்று விசாரணை நடத்திதி மன அழுத்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணையை முடித்துள்ளனர். 

ஆனால், இறந்த மாணவியின் குடும்பதார்கள் மாணவி பாத்திமா லத்திப் இணைதளங்களை ஆய்வு செய்த போது அதில் நோட் (குறிப்பேடு) எனும் செயலியில் அந்த மாணவி தற்கொலைக்கு காரணமாக இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் முதல் குறிப்பில் ஒரு பேராசிரியரின் பெயரையும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் தற்கொலைக்கு காரணமாக எழுதியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி,  கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது  தொடர் கதையாகிவிட்டது.

 

கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, எவரும் சாதிக்க முடியும் என்று நிறுபிக்கும் மாணாக்களின் மன உறுதியை திட்டமிட்டே சிதைத்து கொண்டு இருக்கிறார்கள். ரோகித் வெமுலாக்கள் வரிசையில் இன்று பாத்திமா லத்தீஃபா.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை’’ எனத் தெரிவித்துள்ளார்.