வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுமார் 150 பேர் கூடி போராட்டத்தில் ஈசுபட்டனர்.

இவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை பெருநகர காவல் சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கந்தன்சாவடி பகுதியில் போராட்டம் நடத்திய வைகோ, தமிழச்சி தங்கபாண்டியன், இளங்கோவன் உள்ளிட்டோர் மீது துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய கே.பாலகிருஷ்ணன் மீது வடக்கு கடற்கரை காவல்துறையினரும், கோருக்குப்பேட்டை பகுதியில் போராட்டம் நடத்திய கே.எஸ். அழகிரி கோருக்குப்பேட்டை காவக்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல வேலூர் துரைமுருகன், கடலூரில் திருமாவளவன், திருச்சியில் கே.என்.நேரு, கரூரில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.