இந்நிலையில் முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசிய ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. வழக்கம் போல இந்தமுறையும் அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் நேரடி போட்டி என்ற சூழல் உள்ளதால், இரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக வசித்து வருகின்றனர். திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில், திமுக வேட்பாளராக மருத்துவர் எழிலன் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பொதுமக்களிடையே பேசிய ஆ.ராசா, கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார். அவரின் இப்பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா அருவறுக்கத்தக்க வகையில் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்திருந்தனர். அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவில், 26-3-2021 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திமுக ஆயிரம் விளக்கு வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒப்பிட்டு தமிழக முதலமைச்சரை மிகவும் இழிவு படுத்தும் வகையில் அவர் பேசினார். இது பலரின் மனதையும் புண்படுத்தி உள்ளது. 

அவர் ஏற்கனவே இது போல தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை அவமரியாதை செய்யும் வகையில் ஆபாசமாக பேசியுள்ளார். அதற்காக அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். எங்களது கட்சி தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து அவரது பேச்சு இருந்து வருகிறது. தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆபாசமாக, அவதூறாக பேசி இருப்பது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. 

எனவே திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவர் இனி வரும் காலங்களில் எந்த விதமான தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட கூடாது என நிரந்தர தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசிய ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆ.ராசா பேசிய வீடியோவை ஆதாரமாக கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.