case filed in high court against government officers in banner issue

பேனர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பேனர்கள், கட் அவுட்களை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் இதை உள்ளாட்சி நிர்வாகமும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக, சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடக்க இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கடந்த வெள்ளிக்கிழமையே பேனர்களும் அலங்கார வளைவுகளும் ஆளும் அதிமுக அரசு சார்பில் வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டதால், கோவை-அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அன்று இரவு அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு என்ற இளைஞர், சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி கீழே விழுந்த ரகு மீது லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த கோவை மக்களின் எதிர்ப்பை அடுத்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. 

ரகு இறந்த இடத்தில் ரகுவை கொன்றது யார் என்ற ஆங்கில வாசகத்தை எழுதி கோவை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, அதிகப்படியான பேனர்களும் அலங்கார வளைவுகளும் சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டதுதான் ரகுவின் மரணத்திற்குக் காரணம் என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பேனர்கள் தொடர்பான உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பேனர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் புறக்கணித்ததால் கோவையில் ரகு என்ற இளைஞர் உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல், சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு உயிரிழந்தார். 

முறையான அனுமதி பெற்று, குறிப்பிட்ட அளவிற்கான பேனர்களை(உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இல்லாமல்) வைத்துவிட்டு விழா முடிந்த அன்றே அவை அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே கோவையில் பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டன. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத கோவை மாநகராட்சி அதிகாரிகளின் மீதும், காவல்துறை அதிகாரிகளின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை(டிசம்பர் 1) வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.