Case filed against Thirumavalavan

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஊர்வலமாக சென்ற தொல்.திருமாவளவன் மீது, சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். திருப்பூர், தஞ்சை, நாகை, திருவள்ளூர் மாவட்டம் போன்னேரி பேருந்து நிலையம், கோவை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. 

பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறிய நடுநிலையாளர்களுமே, தமிழக அரசு உயர்த்தியுள்ள இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை, பாரிமுனையில் நேற்று உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர் என்றும் அனுமதியின்றி அதிக அளவில் ஆட்களை ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றதற்காகவும் தொல்.திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அரசின் அடக்குமுறை கொள்ளை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.