சாத்தான்குளம் தந்தை - மகன மரண வழக்கு விசாரணை முடியும் வரை உள் துறை பொறுப்பை தமிழக முதல்வர் வகிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் காவல் நிலையத்துக்கு கைது செய்து அழைத்து சென்ற தந்தை - மகன் ஜெயராஜ்-பெனிக்ஸ் ஆகியோர் மரணமடைந்தனர். போலீஸார் மிகக் கடுமையாக தாக்கியதில் இருவரும் மரமணடைந்ததாக புகார் எழுந்தது. இது நாடு தழுவிய நிலையில் விவாதப் பொருளானது. எதிர்க்கட்சிகள், பிரபலங்கள், என அனைத்து தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுபற்றி தாமாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், அதுவரை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதனையத்து விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், இரு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார். இதுவரை தலைமறைவாக உள்ள காவலரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த மரண வழக்கு விசாரணை முடியும் வரை உள்துறை அமைச்சக பொறுப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விலக உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ராஜராஜன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாத்தான்குளம் இரட்டை மரணம் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலக் கோளாறு காரணமாக இருவரும் உயிரிழந்தார்கள் என போலீஸாரைக் காப்பாற்றும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்க தகுந்தது அல்ல. எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை உள் துறை பொறுப்பை தமிழக முதல்வர் வகிக்கக் கூடாது. அவர் வசமுள்ள உள் துறையின் கீழ்தான் சிபிசிஐடி போலீஸ் செயல்படுகின்றனர். 


எனவே, வழக்கு நேர்மையான முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால், உள் துறை பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி வகிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறவும் உத்தரவிட வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.