கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்தவர் காரப்பன். பகுத்தறிவாதியான இவர் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கோவையில் இருக்கும் நவ இந்தியா பகுதியில் கடந்த மாதம் 29 ம் தேதி திராவிடம் 100 என்கிற கருத்தரங்கம் நடந்திருக்கிறது. இதில் பங்கேற்று காரப்பன் உரையாற்றியுள்ளார்.

அவர் பேசும்போது இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மத வன்முறையை தூண்டுவதாக பாஜக சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால், விரைவில் காரப்பன் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

தான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு காரப்பன் வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.