பிற மாநிலங்களின் அரசியலுக்கும், தமிழக அரசியலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்று உண்டு. அது, பிற மாநிலங்களில் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் ரீதியாக எவ்வளவுதான் முட்டி மோதி முட்டியைப் பேர்த்துக் கொண்டாலும் கூட பர்ஷனல் விஷயங்களில் நட்பாக கூடிக் கொள்வார்கள். 

ஆனால் தமிழகத்தில் எதிர்கட்சியை எதிரிக் கட்சியாக பார்த்து, பரஸ்பரம் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கேற்று வாழ்த்துக்கள், ஆறுதல்களை பகிர்ந்து கொள்ளக் கூட மாட்டார்கள். இதுதான் கடந்த பல காலமாக இருந்த தமிழக அரசியலின் நிலை. 

ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து இந்த சூழல் மாறியது. தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளில் துவங்கி அத்தனை கட்சிகளும் அரசியல் வேறு, பர்ஷனல் வேறு என்று சற்றே பகுத்தாய்ந்து நடக்க துவங்கியிருப்பதில் சந்தோஷம் தொனிக்கிறது. 

அந்த வகையில் நேற்று விஜயகாந்தை, ஸ்டாலின் பார்க்க சென்றதில் உள் அரசியல் இருந்தாலும் கூட அதில் சக மனிதநேயமும் தெறித்தது அழகு. அதேபோல், ஒரு பெரும் கட்சியின் தலைவரான விஜயகாந்தை சக நடிகர் எனும் முறையில் ரஜினிகாந்த் சந்தித்து உடல் நலன் விசாரித்ததும் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 

ஆனால் அதன் பிறகு கிளம்பிய ஒரு வாட்ஸ் அப் வைரல்தான் வில்லங்கமாகி இருக்கிறது. 
அது என்ன?...

விஜயகாந்தை ரஜினிகாந்த் நேற்று காலையில் சந்தித்தர், ஆனால் மாலை வாக்கில் ஒரு வாட்ஸ் அப் ஃபார்வர்டட் செய்தி வைரலானது. அதில் “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நலன் விசாரிக்க சென்ற நம் தலைவர் ரஜினிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. காரணம், 20% கண்பார்வை மற்றும் தானாக நடக்கும் சக்தியை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்று சொல்லி பிரேமலதா அழுததைப் பார்த்து நம் தலைவரும் கண்கலங்கினார். விஜயகாந்த், நம் தலைவரை அடையாளம் கண்டு மிகவும் கஷ்டப்பட்டு பெயரை சொன்னார். மிகவும் வேதனையாக உணர்ந்தார் நம் தலைவர் ரஜினி அவர்கள்.” என்று இருந்தது. 

ஏதோ ரஜினிகாந்த் நிர்வாகிகள் தரப்பில் உருவாக்கப்பட்ட செய்தி போல் இதன் தோற்றம் இருந்ததால் பலரும் நம்பி மளமளவென ஷேர் செய்தனர்.

இந்த தகவல் அப்படியே கேப்டன் தரப்புக்கும் வந்தது. கேப்டனின் மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா அதை வாசித்துவிட்டு மிகுந்த கோபமும், வருத்தமும் அடைந்துவிட்டாராம். ‘அண்ணன் ரஜினிகாந்த் வந்தார்கள், கேப்டன் அவரை வரவேற்று, கைகளைப் பற்றி அருமையாக பேசினார்கள். அண்ணனும் கேப்டனின் உடல்நிலை முன்னேற்றத்தைப் பார்த்து சந்தோஷ்ப்பட்டு கூடுதல் உற்சாகம் தந்து சென்றார். இதுதானே உண்மை. ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்படியொரு வதந்தியை கிளப்பியுள்ளார்களே?” என்றிருக்கிறார். 

ஆனாலும் அந்த செய்தி பரவுவதும், கேப்டனின் உடல்நிலை பற்றி ஆளாளுக்கு ஒரு வித கதைகளை கிளப்புவதும் தொடர்வதுதான் வேதனை. 

யானைகள் படுத்துக் கிடந்தால் எலிகள் எட்ட நின்று ஏளனச்சேட்டைகள் செய்வதுதான் உலகம்!