உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் தே.மு.தி.க உதயமான நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க தடுமாறியபடி வர அவரை அவரது மகன் சண்முக பாண்டியன் தாங்கிப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தது காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.
   
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ந் தேதி தே.மு.தி.க மதுரையில் உதயமானது. அந்த வகையில் கட்சியின் 14வது ஆண்டு துவக்க விழாவை தே.மு.தி.கவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தே.மு.தி.கவின் ஒவ்வொரு துவக்க நாளிலும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கட்சிக் கொடியை ஏற்றுவதை விஜயகாந்த் வழக்கமாக வைத்துள்ளார்.
   
அந்த வகையில் இன்று காலையிலேயே கேப்டன் குளித்து கொடியேற்ற தயாரானார். கட்சியின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான பார்த்தசாரதி வந்து முதலில் கேப்டனிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் அவருடன் ஒரு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து வீட்டுக்கு வெளியே உள்ள கம்பத்தில் கொடியேற்ற கேப்டன் வருகை தந்தார். அவரால் வேகமாக நடக்க முடியாத சூழலில் மகன் சண்முக பாண்டியன் கை தாங்கலாக அழைத்து வந்தார்.


  
கொடி ஏற்றி வைத்த பிறகு அங்கிருந்தவர்களுக்கு கேப்டன் இனிப்பு கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. இதனால் கேப்டனை ஒரு குழந்தையை பிடிப்பதை போல் அவரது மகன் சண்முக பாண்டியன் தாங்கி பிடித்துக் கொண்டார். கேப்டனும் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
   
வழக்கமாக கம்பீரமாக நின்று கொண்டு இனிப்பு வழங்கும் கேப்டன் இந்த முறை குழந்தையை போல் நின்று கொண்டிருந்தது அங்கிருந்தோரை கலங்கச் செய்வதாக இருந்தது. இதன் பின்னர் தே.மு.தி.கவின் தலைமை அலுவலகத்திலும் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் அங்கு கேப்டன் செல்லவில்லை. தே.மு.தி.க உதயமாகி 14 ஆண்டுகளில் அவர் சென்னையில் இருக்கும் போது கட்சி அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்காதது இதுவே முதல் முறை.