மார்ச் மாத மத்தியில் தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தை களம் இறக்க வேண்டும் என்பது தான் மு.க.ஸ்டாலினின் வியூகம். புதிதாக அமைய உள்ள மக்களவையில் தி.மு.கவின் பங்களிப்பு கணிசமாக இருந்தால் மட்டுமே தேசிய அளவில் தனக்கு மரியாதை தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஸ்டாலின் நம்புகிறார். மேலும் கலைஞர் கால தி.மு.க போல இல்லாமல் ஜெயலலிதா ஸ்டைலில் கட்சியை நடத்த வேண்டும் என்கிற எண்ணமும் ஸ்டாலினுக்கு உள்ளது. 

அதனால் தான் கலைஞரை போல கூட்டணி கட்சிகளை அணுசரித்து செல்லாமல் ஜெயலலிதாவை போல் தள்ளி வைத்து ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் சொல்கிறார்கள். கலைஞர் தோழமை கட்சியினரை எப்போதும் அருகிலேயே வைத்திருப்பார். ஆனால் ஜெயலலிதா தேர்தல் என்றால் மட்டுமே அவர்களை அருகே அனுமதிப்பார். அதே பாணியில் தான் வைகோ, திருமா, இடதுசாரிகளை சற்று தொலைவில் வைத்தே அரசியல் செய்து வருகிறார் ஸ்டாலின். அதோடு மட்டும் அல்லாமல் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று முடிவெடுத்த ஜெயலலிதா தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். 

மார்ச் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவோ தனது பிறந்த நாளான பிப்ரவரி மாததே 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தார். கூட்டணி பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்படாத நிலையில் தனித்து களம் இறங்கி 37 தொகுதிகளை அ.தி.மு.கவின் வசப்படுத்தினார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அ.தி.மு.கவிற்கு பெற்றுக் கொடுத்தார்.

அப்போது அதிமுகவிற்கு சாதகமான சூழல் இருந்தது போல் தற்போது தி.மு.கவிற்கு சாதகமான சூழல் இருப்பதாக ஸ்டாலின் கருதுகிறார். எனவே தான் கூட்டணி பேச்சை அதிகாரப்பூர்வமாக தொடங்காத நிலையில் வேட்பாளர் தேர்வை ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். 30 தொகுதிகளில் தி.மு.க நிச்சயமாக போட்டியிடும் என்று உறுதிப்படுத்தப்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தான் தற்போது சித்தரஞ்சன் சாலை ஸ்டாலின் வீட்டில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஆறு பேரை தற்போது தேர்வு செய்து அவற்றில் இருந்து இரண்டு பேரை பைனல் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணி முடிந்து, அடுத்த மாதம் அந்த இரண்டு பேரில் ஒருவரை பைனல் செய்து மார்ச் மத்தியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்க ஸ்டாலின் ஆயத்தமாகி வருவதாக சொல்கிறார்கள். 

வி.சி.கவாக இருந்தாலும் சரி ம.தி.மு.கவாக இருந்தாலும் சரி உதயசூரியன் சின்னம் தான் என்பதில் ஸ்டாலின் பிடிவாதம் காட்டுவதாக சொல்கிறார்கள். என்ன தான் ஸ்டாலின் வேட்பாளர் தேர்வில் பிசியாக இருந்தாலும் அவருக்கு நெருக்கமான சிலர் கள நிலவரத்தையும் எதார்த்தத்தையும் உணர்ந்து கூட்டணிக்கான முயற்சிகளில் மும்முரம் காட்டுகின்றனர். இதனால் ஸ்டாலின் வீடும் சரி, அறிவாலயமும் சரி காலை முதல் இரவு வரை பரபரப்பாகவே இருக்கிறது.