தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற விஷயங்களில் டி.டி.வி தினகரனின் நடவடிக்கை ஜெயலலிதாவையே மிஞ்சும் வகையில் உள்ளதாக அக்கட்சியினர் புல்லரித்துப்போய் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தினகரன். அவர் செல்லும் இடம் எல்லாம் அ.ம.மு.க தொண்டர்கள் குவிந்து பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போதும் தினகரனை உற்சாகப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அரங்கேறுகின்றன. நிர்வாகிகள் அனைவருமே தினகரனை முழு மூச்சாக நம்பி களப்பணிகளை செய்து வருகின்றனர்.

நிர்வாகிகள் ஒத்துழைப்பு, தொண்டர்களின் ஆர்பரிப்பால் உற்சாகத்துடன் காணப்படும் டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி., நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும் 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு என்றும் தினகரன் தெரிவித்தார். இது போதாக்குறைக்கு திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தினகரன் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன், சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தனது வேட்பாளராக மனோகரன்

போட்டியிடுவார் என்று அறிவித்து அசத்தினார். அ.தி.மு.க என்கிற இயக்கத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதாவே கூட எந்த இடத்திலும் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளரை அறிவித்தது இல்லை. ஏன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தான் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை கூட ஜெயலலிதா அறிவிப்பார்.

ஆனால் ஜெயலலிதாவிடம் பாடம் படித்ததாக கூறிக் கொள்ளும் தினகரனோ, ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் சட்டமன்ற தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் கூட்டணிக்கு யார் வருவார்கள் யார் வரமாட்டார்கள் என்பதே உறுதியாகாத நிலையில், 25இடங்களில் தாங்களும், 15 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் என்று தில்லாக அறிவித்துள்ளார் தினகரன்.

தினகரனின் இந்த அணுகுமுறை ஜெயலலிதாவையே ஓரம் கட்டம் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தினகரனின் இந்த அணுகுமுறையை விரும்புவதாகவே அவரது கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கலந்தாலோசித்து தான் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பை போன்றவற்றை எல்லாம் அறிவிக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.