இடைத்தேர்தல் முடிந்த கையோடு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வகுத்து தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா எப்போதுமே தேர்தல் பணிகளில் கில்லியாக செயல்படுபவர்களுக்கு உயர் பதவி கொடுத்து தன் அருகே வைத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்றாலும் அவரோடு அவ்வப்போது ஜெயலலிதாவே நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவார் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் தேர்தல் பிரச்சார பயண திட்ட ஏற்பாட்டில் செங்கோட்டையனை அடித்துக் கொள்ள அதிமுகவில் ஆள் இல்லை என்பது தான்.

இதே போல் ஓபிஎஸ் – நத்தம் விஸ்வநாதன் – தருமபுரி பழனியப்பன் என மூன்று பேர் தான் கடந்த 2014 மற்றும் 2016 தேர்தலில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக  இருந்தார்கள். தேர்தல் சமயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் கூட வேறு வழியே இல்லாமல் இவர்களை வைத்து தான் பிரச்சாரப் பணிகளை ஜெயலலிதா நிறைவு செய்தார். மேலும் தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு உடனடியாக புரமோசன் அளிப்பதும் ஜெயலலிதாவின் பாணி.

அந்த வகையில் தற்போது இடைத்தேர்தலில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்களையும் கூடுதல் பொறுப்புகளையும் வழங்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய அதே சமயம் சசிகலா தரப்பால் ஓரம் கட்டப்பட்டு தற்போது ஆக்டிவாக இல்லாத கோவை செம வேலுச்சாமி உள்ளிட்டோரையும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்க எடப்பாடி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதே போல் அமைச்சரவையில் சிறப்பாக செயல்படாத சிலரின் இலாக்காக்களை பறிக்கவும், ராமநாதபுரம் மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதால் காலியாக உள்ள இலாகாவிற்கு புதியவர் ஒருவரை நியமிக்கவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். எனவே இடைத்தேர்தல் முடிந்த கையோடு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட்டாரம் தற்போது பரபரத்துக் கிடக்கிறது.