இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிக்ர் கமலஹாசன், இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு இருக்கும்போது அதை தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி என குற்றம்சாட்டினார்.

எதிர்கால தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும்போது கண்ணீர் புகைக்குண்டுகள்  எறிவதும், போலீசாரை கொண்டு அடிப்பதும் தான் அரசாங்கத்தின் பதிலா என அவர் கேள்வி எழுப்பினார்.

விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டு இருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் நேரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கான அவசரம் என்ன? என்ற கேள்விதான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கபுள்ளி என்றும் கமல் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?. கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலைதான் டெல்லியிலும், அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.

மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்கால தலைமுறையினரிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ? என்ற பயத்தில் விழும் அடி என கூறினார்.

அ.தி.மு.க. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, தமிழ் இனத்துக்கும், தேசத்துக்கும் அவர்கள் செய்த துரோகம் ஆகும். இந்த பிரச்சினை கட்சி வரைகோடுகள், சாதி, பால், இனத்தை கடந்தது. இது தேசம் சம்பந்தப்பட்ட விஷயம். அ.தி.மு.க.வினர் வியாபார கட்டாயத்தால் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அதை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் என கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்தார்..