CAA - அதாவது - குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்லுவது என்ன ? சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று தேசங்களில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். மேலோட்டமாக பார்த்தால் இந்த சட்டம் 
எந்தவிதமான முரணும் இல்லாததாக தோன்றினாலும் –
 
அதில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு ஷரத்துக்களும், இந்த சட்டத்தோடு தொடர்புடைய மற்றொரு சட்டமும் தரும் அச்சம் தான் இந்த போராட்டத்திற்கான காரணமாக உள்ளது. 

அவை 
 
.1.  இந்த சட்டம் அகதிகள் என்ற வரையறையில் இஸ்லாமியர்களை விலக்கி வைக்கிறது.
2. இந்த சட்டம் குறிப்பிட்ட 3 தேசங்களை மட்டும் கணக்கில் கொள்கிறது
3. இதற்கு முன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள NRC - அதாவது தேசிய குடியுரிமை கையேடு - சட்டம்.

முதலில் NRC என்றால் என்னவென்று பார்ப்போம்.

1950 முதல் 1970 வரை அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில் இன ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாக 1 கோடிக்கும் அதிகமான அகதிகள் (வங்காள இனத்தவர்கள்) இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். அதற்குப்பின் இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு, போரிட்டு "வங்கதேசம்" என்ற புதிய நாடு உருவாக உதவியது நாம் எல்லாம் அறிந்த வரலாறே. புது தேசம் உருவானபின் அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் – கிட்டத்தட்ட 80% - தங்கள் தேசம் திரும்பி விட்டனர். மீதி இருந்தவர்கள் அப்போதைய மேற்கு வங்க மாநிலத்திலும் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களிலும் குடி பெயர்ந்தனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் குறிப்பிட்ட அளவில் குடியேறினர். அஸ்ஸாமிகளுக்கும் குடியேறிய வங்க இனத்தவர்களுக்கும் ஒரு "இன" ரீதியான மோதல் இருந்துக் கொண்டே வந்தது. இந்த விவகாரம் எவ்வளவு தீவிரம் என்றால் - பிற தேசத்திலிருந்து குடியேறியவர்களை எதிர்த்து தொடங்கப்பட்ட  மாணவர் இயக்கம் பின்னர்  "அசாம் கன பரிஷத்" என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இளம் வயது முதல்வர் என்ற பெயரையும் பெற்றார் மாணவர் இயக்கத் தலைவரான "மஹந்தா". இதன் விளைவாக பிற தேசத்திலிருந்து குடியேறியவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்ற பணி தொடங்கியது. இந்த பணி திருப்திகரமாக இல்லாததால் உச்சநீதி மன்றம் தலையிட்டு இதை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. அந்த பணி சமீபத்தில் முடிவடைந்து சுமார் 18 லட்சம் மக்கள் NRC-ல் இடம் பெற தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் இந்து மற்றும்  இஸ்லாமியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட சம அளவில் உள்ளது.

NRC க்கும் CAA க்கும் உள்ள தொடர்பு என்ன?

தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெற்றவர்கள் இயல்பாகவே குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள். இந்த பதிவேட்டில் இடம் பெறாத 18 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக ஆவார்கள். இப்போது இயற்றப்பட்டுள்ள CAA சட்டம் அவர்கள் குடியுரிமை பெற உதவி செய்யும்.. ஆனால் CAA-ன் படி இஸ்லாமியர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும். மீதி உள்ளவர்கள் - இஸ்லாமியர்கள் -  வேறு தேசங்களுக்கு செல்ல நினைப்பவர்கள் அகதிகளாக செல்லலாம். இங்கேயே தான் இருப்போம் என்பவர்களுக்காக அரசு அகதிகள் முகாம்களை கட்டிக்கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக 3000 பேருக்கு 40 கோடி செலவில் திறந்தவெளி முகாம் ஒன்று அசாமில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீதியுள்ள சுமார் 8 லட்சம் பேருக்கு இனி கட்ட திட்டம்.

சரி - இது அசாம் என்ற மாநிலம் சார்ந்த பிரச்னை தானே?

அது முற்றிலும் உண்மையில்லை. இந்த திட்டத்தை இந்தியா முழுக்க செயல்படுத்துவோம் என உள்துறை அமைச்சர் இப்போது நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். எனவே இது தேசம் சார்ந்த ஒன்றாகவே இப்போது கருதப்படுகிறது.

சரி - இதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?

முதலில் இந்த வாதம் முழுமையான உண்மையில்லை - முஸ்லிம்களும் எதிர்க்கிறார்கள் என்பதே சரி. எதிர்ப்பவர்களை 3 அல்லது 4 வட்டத்திற்குள் அடக்கி விடலாம் - ஒவ்வொருவரின் எதிர்ப்பிற்கும் ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கிறது. பொதுமைப்படுத்திவிடுவதின் மூலம் பிரச்சனையின் சாரத்தை நாம் இழந்து விட கூடாது.

முதலில் - வடகிழக்கு மாநிலங்கள் காணங்கள். இவர்கள் எதிர்ப்பது CAA-வை மட்டும் தான். உண்மையில் இவர்களின் போராட்டத்தால் தான் NRC கொண்டு வரப்பட்டது. இவர்களை பொறுத்தவரை இவர்களின் அச்சம் இரண்டு வகை

1. இன ரீதியான அச்சம். NRC மூலம் கண்டறியப்பட்ட அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும். தங்கள் இன அடையாளம் வங்க அடையாளமாக மாறி விடக்கூடாது என்பது தான் இவர்களின் போராட்டம். இந்த போராட்டத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

2. தங்கள் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்து 371 (a) முதல் 371 (h) வரை இந்த சட்டம் மூலம் களைந்தெறியப்படும் என்ற அச்சம்.

இரண்டாவதாக - தமிழர்கள். 

இவர்கள் எதிர்ப்பது -  இலங்கைத் தமிழர்கள் இந்த மண்ணில் சுமார் 30 வருடங்களாக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கான குடியுரிமை பற்றி பேசாமல் அரசியல் ஆதாயத்திறகாக ஒரு பழிவாங்கல் போல் சட்டம் இயற்றக்கூடாது என்பது தான் முக்கிய கோரிக்கை

மூன்றாவதாக - இஸ்லாமியர்கள். 

இவர்கள் எதிர்ப்பது உண்மையில் CAA-வை அல்ல, NRC-யை. NRC இந்தியா முழுமையும் விரிவுப்படுத்தப்படும் என்ற உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தான் இந்த எதிர்ப்பிற்கு காரணம். NRC மூலமாக - அரசு கேட்கும் ஆதாரம் - குறிப்பாக மூதாதையர் இந்த நிலத்தவர் தான் என்று நிரூபிக்கும் ஆதாரம் இல்லை அல்லது செல்லாது என்ற அடிப்படையில் யாரை வேண்டுமானால் நாளை ஒரு "தேசமற்றவனாக" ஆக்கிவிட முடியும் என்ற அச்சம் தான் இந்த எதிர்ப்பின் அடிப்படை. NRC மூலமாக யார் வேண்டுமானால் தேசமற்றவனாக காட்டப்படலாம் - இங்கு மதம் ஒரு காரணி அல்ல. ஆனால் இஸ்லாமியர் தவிர்த்த பிற மதத்தினர் மறு குடியுரிமையை பெற்று விட முடியும். அதற்கு CAA துணை புரியும் - ஆனால் இஸ்லாமியர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

நான்காவதாக - இந்த சட்டம் அரசியல் அமைப்பிற்கே எதிரானது என்று கருதக்கூடியவர்கள். 

இது எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவர்கள் எதிர்ப்பின் காரணம்.

1. இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கு மதத்தை காரணியாக வைத்து குடியுரிமை சட்டம் இயற்றப்படுவது அரசியல் அமைப்பேயே கேலிக்குறியாக்கும்.
2. அண்டை நாடுகள் மதத்தின் பெயரால் செயல்படுவதை காரணம் காட்டி நாமும் அதை செய்தால் - இன்று அந்த தேசங்கள் சந்திக்கும் பேரழிவை நாமும் நாளை சந்திக்க நேரிடும்.
3. உலகமெங்கும் வலுப்பெற்று வரும் வலதுசாரி சிந்தனையான "வலியவன் வாழ்வான்" அல்லது Majoritarian State என்பதன் நீட்சியாக நாமும் சென்று விடக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய குடியரசு (Federal State ) ஒற்றைத்தன்மையை நோக்கிய சர்வாதிகாரமாக மாறிவிட கூடாது என்ற கவலை.

அப்படியானால் தீர்வு தான் என்ன?

இந்த போராட்டங்கள் ஒரு அடையாளமே ஒழிய - அவை மட்டுமே எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது. “சரி – தவறு” என்பதை தாண்டி, அரசு முதலில் இந்த சட்டம் ஏற்படுத்தியிருக்கும் அமைதியின்மையை, அச்சத்தை முதலில் உணர வேண்டும். ஒரு சட்டம் என்பது மக்களுக்காக தானே தவிர - சட்டத்திற்காக மக்கள் அல்ல. ஒரு சட்டம் பாதிப்பை கொடுக்கும் என்றால் அதை குறைந்தபட்சம் மறு பரிசீலனையாவது செய்ய வேண்டும். மக்களிடம் உள்ள அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முதலில் பிரச்னையுள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்..

தீர்வுகள் சொல்லுமளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் - குறைந்தபட்சம் இந்த அமைதியின்மையை அரசு செவிகொடுத்து கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்கள்

1. முதலில் - நாம் நம்மை பாகிஸ்தானோடு ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். நிலப்பரப்பின் அடிப்படையிலும், பொருளாதார சமூக அடிப்படையிலும் நம்மை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் வேண்டுமானால் ஒப்பிட்டுக் கொள்ளலாம். பாகிஸ்தான் தான் நமது அளவுகோல் என்றால் - அவர்கள் செய்வது தான் நமக்கு ஒப்பீடு என்றால் - நாமும் அவர்களை போல் ஆகி விடுவோம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. வடகிழக்கு மாநிலங்களின் அச்சஉணர்வை போக்கவேண்டும். அவர்களுக்கு இந்த குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் இழப்பு குறித்து விவாதம் நடத்தி - அவர்களின் உரிமைகளுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அரசு தரவேண்டும். தற்காலிக ஏற்பாடுகள், இழப்பீடுகளை உறுதி செய்ய வேண்டும்.

3. இஸ்லாமியர்களின் NRC குறித்த அச்ச உணர்வை போக்க வேண்டும். அதற்கு முதலில் NRC-யை நெறிப்படுத்த வேண்டும். முன்னோர்களின் document verification போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை தளர்த்தி - சரியான முறையை உட்கொணர முன்வர வேண்டும்.

4. இறுதியாக - நாம் ஒரு பெரிய ஜனநாயக நாடு. இது வரை எந்த ஒரு நாடும் இவ்வளவு அகதிகளை அல்லது அகதிகள் என்று அடையாளம் காணப்பட்டோரை வெளியேற்றியதாக வரலாறு இல்லை. அது நாளைய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அவப்பெயராக - தீரா கறையாக மாறி போகும். குடியேற்ற சட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம். எல்லைகளை பலப்படுத்தலாம். இனி சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் நடைபெறாமல் தடுக்க என்ன வேண்டுமோ அவை அனைத்தையும் செய்யலாம். ஆனால் 50 ஆண்டுகாலம் இங்கு வாழ்ந்து விட்ட மக்களை வெளியேற்றம் செய்வது என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. அதையும் மத ரீதியாக செய்வது நமது ஜனநாயகத்திற்கு சரியன்று.

நிறைவாக..

தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் எந்த பாகுபாடு இல்லாமல் குடியுரிமை வழங்குவதும் - NRC குறித்த அச்ச உணர்வை போக்க முன்வருவதுமே இப்போதைய பதட்டத்தை குறைக்கும். அப்படியல்லாது இதையும் ஒரு அரசியல் விளையாட்டாக கருதினால் இந்த முறை நாம் கொடுக்கும் விலை நம் மீது தீராத பழியை தான் விட்டு செல்லும்.

கட்டுரை ஆசிரியர் KMK ABBAS  …. 


புதிய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கேஎம்கே அப்பாஸ்  சுய சார்பு தொடர்பாக அருமையான கட்டுரைகளை எழுதி வருபவர். மென் பொறியாளரான இவர்  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எழுதியுள்ள இந்த கட்டுரை சிறப்பானதாக அமைந்துள்ளது.