இன்றைய தேசத்தின் நிலை  என்ற தலைப்பில் சி-வோட்டர் மற்றும் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் வாக்காளர்களிடையே அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
 
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 6,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில்  56 சதவீத வாக்குளைப் பெற்று   பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் வகிக்கிறார்.  ஆனால் மார்ச் முதல் வாரத்தில் இது போன்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில்  மோடி 60 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அது தற்போது 56 சதவீதமாக குறைந்துள்ளது.  இப்பட்டியலில் மற்றவர்களை விட மிக அதிகமான வித்தியாசத்தில் மோடி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

மோடியின் போட்டியாளராக கருதப்படும் ராகுல் காந்திக்கு இந்த கருத்துக் கணிப்பில்  7 சதவிகித ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கூட ராகுல் காந்திக்கு 20 சதவிகித ஆதரவு இருந்தது. ஆனால் அது தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது.

நரேந்திர மோடியின் பணிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு 50 சதவிகிதத்தினர் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்பிரிவில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையேயான இடைவெளி 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது.

தேர்தல் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு பாஜகவினருக்கு ஒரு புது உத்வேகத்தைத் தந்துள்ளது.