நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெபெற உள்ள நிலையில் அதிமுக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மறைமுக பேச்சு வார்த்தை நடந்து வருவது தெரிந்தவுடன் முதன் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தவர் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இதே போல் அடுத்து பாமக வுடன் கூட்டணி என்று எடப்பாடி முடிவெடுத்ததும் மனிதர் கொந்தளித்துவிட்டார். ஏனென்றால் விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும், பாமகவினருக்கு ஏழாம் பொருத்தம்தான்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சி.வி.சண்முகம் வீட்டுக்கு வந்த ரௌடி கும்பல் ஒன்று அவரை கொல்ல முயற்சி செய்தது. அந்த களேபரத்தில் சண்முகத்தின்  சகோதார் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ராமதாசின் நெருங்கிய உறவினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்தான் அதிமுக – பாமக கூட்டணி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராமதாஸ் தரும் விருந்திலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சண்முகம் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சண்முகத்தை சமாதானம் செய்தனர்.

சொந்த பகையை விட்டுவிட்டு சமாதானம் ஆகிவிடுங்கள் அதை பேசி முடித்துவிடலாம் என கூறிய அவர்கள் கட்சியின் நலனுக்காக கொஞ்சம் இறங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து பகையை மறந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த விருந்தில் அமைச்சர் சி வி சண்முகம் கலந்து கொண்டார். பாமக விற்கு எதிராக இருந்த பல நாள் பகையை மறந்து, அதிமுக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.

விருந்துக்காக தைலாபுரம் வந்த சண்முகத்தை ராமதாஸ் வாசல் வரை சென்று வரவேற்றார். இதன் மூலம் இவர்கள் இடையே நீடித்து வரும் பிரச்சனை தீர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.