நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் மீதான விலையை பெருமளவு குறைத்த போதும் தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படாததாக கூறியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்ததைக் கட்டுப்படுத்தவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதியாக அளித்த நீட் தேர்வு ரத்து, குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என கூறியும், பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துக்கொண்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்டையை கழட்டுவோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கையில் பதாகை ஏந்தி முழுக்கமிட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், காவல்துறையை தமிழக அரசின் ஏவல் துறையாக செயல்படுத்துகின்றன, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம். மேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய டி.ஜ. பி சைலேந்திரபாபு தினமும் சைக்கிள் ஓட்டுகிறார். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.