விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து விக்கிரவாண்டியில் தி.மு.க. போட்டியிடுவதாகவும், அதன் கூட்டணி கட்சியான, காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறது. அதேபோல், அதிமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில், நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், அதிமுகவில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. இதில், தேமுகவிற்கு, பாமகவிற்கும் ஓரளவிற்கு செல்வாக்கு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு, இந்த ஓட்டு வங்கி கைகொடுக்கும் என, அக்கட்சி தலைமை பக்கவாக கணக்கு போட்டுள்ளது. 

எனவே, தே.மு.தி.க.வின் ஆதரவை பெறுவதற்காக, அக்கட்சி தலைவர், விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயகுமார், சீனிவாசன், தங்கமணி ஆகியோர், நேற்று முன்தினம் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களை, தங்கள் கட்சிக்கு ஒதுக்கவேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் செலவை அ.தி.மு.க. ஏற்க வேண்டும்' என, இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு சம்மதித்தால் இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.