‘இப்போதைக்கு இடைத்தேர்தலே வேணாஞ்சாமி’....! சர்வேயில் தெறிக்கவிட்ட தமிழகம், திணறும் அரசு...!

ஊருக்கு முந்திக் கொண்டு இருபது தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்தபோதே எதிர்கட்சிகள் கூறினார்கள் ‘இது வெற்று சீன். நிச்சயம் தேர்தலை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்வார்கள்.’ என்று. அதை அப்படியே உண்மையாக்கி இருக்கிறது மத்திய, மாநில அரசுகள் இரண்டும். தள்ளிப் போ! தள்ளிப்போ! என்று தேர்தலை இவர்கள் விரட்டும் பின்னணியில்  உளவுத்துறை எடுத்த சர்வே முடிவுதான் முக்கிய பங்கு வகிக்கிறது! என்று நெத்தியடியாய் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அப்படியென்ன சர்வே அது...

மரணமடைந்த கருணாநிதியின் திருவாரூர், போஸ்ஸின் திருப்பரங்குன்றாம் ஆகிய இரண்டு தொகுதிகளோடு, தகுதியிழப்படைந்த 18 எம்.எல்.ஏ. தொகுதிகளோடு ஆக மொத்தம் 20 தொகுதிகளில் இப்போது எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இவற்றுக்கு இடைத்தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள வலுவான கூட்டணியுடன் தி.மு.க.வும், ’வந்தால் மல, போனால் முடி’ என்று அசாத்திய துணிச்சலில் தினகரனும் களமிறங்கினர்.  மாநிலத்தை ஆளும் அதிகாரம் கையிலிருக்கும் தைரியத்தில் அ.தி.மு.க.வும், தேசத்தை ஆளும் சகல அதிகாரமும் கையிலிருக்கும் கெத்தில் பி.ஜே.பி.யும் தேர்தலை சந்திக்க தயாராகின. அதில் அ.தி.மு.க.வோ பொறுப்பாளர் நியமனம், பூத் கமிட்டி அமைப்பு! என்று எக்ஸ்ட்ரா கியரை போட்டு நகர்ந்தது. 

இந்நிலையில் கஜா புயல் களேபரத்துக்கு பின், அ.தி.மு.க. அதில் பிஸியாகிவிட்டது. ஆனாலும் பிப்ரவரியில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தி முடித்துவிடுவோம்! என்று மதுரை ஐகோர்ட் பெஞ்சில் சமீபத்தில் தகவலையும் பதிவு செய்தனர். 

இந்நிலையில்தான் உளவுத்துறை போலீஸார், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இருபது தொகுதிகளிலும் மக்களின் நாடித்துடிப்பை பிடித்து ஒரு சர்வேயை ரகசியமாக நடத்தியிருந்தனர். ‘யாரை இங்கே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று தலையை சுற்றி முக்கை தொட்டு அவர்கள் கேட்ட மறைமுக கேள்விக்கு வந்து விழுந்த பதில்கள் அதிர வைத்துள்ளன. அதாவது சுமார் பதினான்கு அல்லது பதினைந்து தொகுதிகளில் தி.மு.க. வெல்லும்! என்றும், மீதி ஐந்தை எடப்பாடியாரும் - தினகரனும் சண்டைபோட்டு பகிர்ந்து கொள்வார்கள்! என்றும், தமிழக பி.ஜே.பி. ஒத்தைக்கு ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது! என்றும் முடிவுகள் வந்ததாம். இதை அப்படியே டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள். உட்கார்ந்து தாடியை தடவிய டெல்லி லாபி, ‘தள்ளி வையுடா இடைத்தேர்தலை’ என்று உத்தரவு போட்டுவிட்டது. அதைத்தொடர்ந்தே ராவத் ’கஜா புயல் பாதிப்பை காரணமாய் குறிப்பிட்டு, இடைத்தேர்தலை தள்ளிவைக்க தமிழக அரசு கேட்டால் நிச்சயம் பரிசீலிப்போம்.’ என்று அறிக்கையை சமீபத்தில்விட்டாராம். 

சர்வே நிலவரம் தமிழக முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு, ‘இதுதான் உங்க கட்சியோட இப்போதைய லட்சணம். இடைத் தேர்தல் நடந்தால் ஆட்சி என்னாகும்னு யோசிச்சுக்குங்க. அதிலும் கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு உங்க நிலைமை இன்னும் மோசமாதான் ஆகியிருக்குது.’ என்று அழுத்தமாக அலர்ட் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே தங்களின் நிலைமையை ஸ்மெல் செய்து வைத்திருந்த அ.தி.மு.க., எப்படியாவது இடைத்தேர்தலை இழுத்துக் கொண்டு போகலாம் எனும் முடிவில்தான் இருந்தது. இந்நிலையில் டெல்லியும் இப்படி சொல்லிவிட, ‘இப்போதைக்கு இடைத்தேர்தலே வேணாஞ்சாமி’ எனும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். 

இது ஒரு புறமிருக்க, இடைத்தேர்தலை தள்ளிப்போடுவதில் டெல்லியும் துடிப்பு காட்டிட காரணம், தமிழக பி.ஜே.பி. ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று ரிசல்ட் வந்திருப்பதுதான். இடைத்தேர்தலில் இப்படி வாஸ் அவுட் ஆனால் அது நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதே பயம். 


சரி, எத்தனை மாதங்களுக்குதான் இப்படி தள்ளிப்போடுவார்கள், ஒரு கட்டத்தில் கிளைமேக்ஸுக்கு வந்துதானே ஆகணும்! இவர்கள் தள்ளிப்போட போட மக்களுக்கு இவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக் கொண்டேதான் போகும்! என்பதே எதிர்கட்சிகளின் அசையாத நம்பிக்கை. அதேபோல், தி.மு.க. 15 தொகுதிகள் வரை வெல்லும் என்பதை தினகரனால் நம்ப முடியவில்லையாம், அதிலும் ஐந்து அளவுக்கு தான் வெல்வேன்! என்றே நினைக்கிறாராம். 
ஹூம்! ஆளாளுக்கு ஒரு ஃபீலிங், ஆனாலும் தினாவுக்கு ஓவர் ஃபீலிங்குதான் போங்க.