தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு தொகுதிகளில் கோயமுத்தூர் மாவட்டம் சூலூரும் ஒன்று. அ.தி.மு.க.வின் கையில் இருந்த இந்த தொகுதியை பறித்தெடுத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கி இருக்கிறார் ஸ்டாலின். 

இதனால் கோயமுத்தூர் மாவட்ட கழகத்தில் பெரும் பண செல்வாக்குடைய மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு தானாகவே முன் வந்து சீட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் வரை பொங்கலூர் பழனிசாமி செலவு செய்ய வேண்டி இருக்கும் என தலைமை திட்டமிட்டு கொடுத்துள்ளது.

 இந்நிலையில் இந்த தொகுதியில் வெற்றிக்கான வழிகளை திட்டமிட்டு செயல்படுத்திடவும், பிரசாரத்தை வலுவாக கொண்டு செல்லவும்  தலைமை கழக பொறுப்பாளராக எ.வ.வேலுவை நியமித்திருக்கிறார். சூலூர் சென்றதிலிருந்தே சுறுசுறுவென செயல்படுகிறாராம் வேலு. ஆனால், தன்னை தட்டிக் கேட்கவோ எதிர்த்துப் பேசவோ அம்மாவட்ட கழகத்தில் யாருமே இல்லாத தைரியத்தில் கன்னாபின்னாவென கட்டளைகளைப் போட்டுத் தாக்குகிறாரம். குறிப்பாக சூலூர் தொகுதியை பல பூத்களாக பிரித்து ஒவ்வொரு பூத்துக்கும் இரண்டு முக்கிய லோக்கல் நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக போட்டு வைத்துள்ளாராம். 

அவர்களை தேர்தல் பிரசார செலவு, ஸ்டாலின் வரப்போவதால் அதற்கான நிகழ்ச்சி செலவு அதுயிதுவென தலைக்கு சுமார் பத்து, பதினைந்து லட்சங்களைக் கொட்டிட சொல்கிறாரார்களாம் தலைமையிலிருந்து கோவைக்கு சென்றிருக்கும் நிர்வாகிகள். இதில் லோக்கல் நிர்வாகிகள் நொந்து போய்க் கிடக்கின்றனர். அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து லட்சங்களை கொட்டினால், கணக்கு கோடிக்கு மேல் போகிறதாம். கடுப்பேறிய அவர்கள்....”கோடி கோடியா காசு வெச்சிருக்கிறதாலேதான் பொங்கலூர் பழனிசாமியை தளபதி களமிறக்கி இருக்கிறார். அப்புறம் ஏன் எங்ககிட்டே காசு கேட்கணும்? அப்படி நிர்வாகிகள் நாங்க செலவு பண்ணி ஜெயிக்க வைக்கிறதா இருந்தால் இந்த கட்சிக்கு  முழு விசுவாசமா இருக்கிற ஏதாவது ஏழை இளைஞரை நிறுத்தியிருக்கலாமே! நாங்களும் சந்தோஷமா செலவு பண்ணியிருப்போம். 

ஆனா கல்லூரி, சுரங்கம்ன்னு வெச்சு பிஸ்னச் பண்ற பெரும் பணக்காரரை வேட்பாளராக்கிட்டு, எங்க பாக்கெட்டுக்குள்ளே கை விடுறது என்னங்க நியாயம்? நாங்க ஏன் செலவு பண்ணனும்? இந்த விவகாரத்தை தளபதி இன்னும் நாலு நாட்கள்ள கோயமுத்தூருக்கு வர்றப்ப போட்டு உடைச்சு, பஞ்சாயத்து வைக்காம விடமாட்டோம்.” என்று பொங்கியிருக்கிறார்களாம். என்னாங்கடா இது, கோயமுத்தூர்  நிர்வாகிங்க ஏக கோவக்காரங்களா இருக்காங்களே! என்று தலைமை கழகத்திலிருந்து சென்று, கோவையில் கூடாரம் போட்டிருக்கும் நிர்வாகிகள் வெலவெலத்து விட்டார்களாம். என்ன சமாதானம் செய்தும் பிரயோசனமில்லையாம். ஆக, ஸ்டாலின் கோயமுத்தூர் செல்கையில் இருக்குது பெரும் பஞ்சாயத்து.