விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், சீட் வழங்காததால் அதிமுக தலைமையை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் 27,456 டெபாசிட் வாங்கி வைப்புத்தொகையை மீட்டெடுத்தார். 

கடந்த அதிமுக ஆட்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீ.வி. மார்க்கண்டேயன். இவர் அதற்கு முன்பு 10 ஆண்டுகள் புதூர் ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இந்நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆதரவாளர் பி.சின்னப்பனுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

இதனால் அதிருப்தியில் இருந்த ஜீ.வி. மார்க்கண்டேயன் விளாத்திகுளத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த தொகுதியில் அதிமுகவில் பிரிந்து வந்த மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்று அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், 27,456 வாக்குகள் பெற்ற மார்க்கண்டேயன் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3-வது இடம் பிடித்து டெபாசிட் வாங்கினார். ஆகையால் வைப்புத் தொகையையும் திரும்ப பெற்றார். விளாத்திகுளம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார், சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜீ.வி. மார்க்கண்டேயன் ஆகியோர் மட்டுமே வைப்புத்தொகையை திரும்பப் பெற்றனர். அமமுக, மநீம உள்ளிட்ட 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.