அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனையடுத்து அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விரைவில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளனர். இதன் காரணமாக அரசியல் களத்தில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சியை கைப்பற்றிய தீரவேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி அசத்தி வருகிறது. ஆனால் அதிமுக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும் பிரச்சாரத்தை தொடங்காமல் உள்ளனர். 

இத்தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த 4 தொகுதிகளில் விஐபி தொகுதியாக கருதப்படுவது அரவக்குறிச்சி. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.   

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேட்டியளித்த செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.