தமிழகத்தில்  விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரும், நாங்குனேரி மற்றும் காமராஜ்நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள இரு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இதில் நாங்குனேரி தொகுதியை பாஜக போட்டியிட வேண்டும் என விரும்பியது. ஆனால் அதிமுகவே நாங்குனேரி தொகுதியில் போட்டியிடும் என அதிமக அறிவித்தது.

இதை பாஜக எதிர்பார்க்காத நிலையில் அவர்களிடையே விரிசல் விழும் வகையில் மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது  கூட்டணியில் இருந்தும் புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியை  பாஜகவுக்கு ஒதுக்காமல் அந்த தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே நாங்குனேரி தொகுதி கிடைக்காத நிலையில் காமராஜ்நகர் தொகுதியும் கிடைக்காமல் போனதால் பாஜக கடுப்பில் உள்ளது. அது மட்டுமல்லாமல் இடைத் தேர்தலில் பாஜகவின் ஆதரவை அதிமுக இதுவரை கேட்டகவில்லை என்ற ஆதங்கமும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காமராஜ் நகர் தொகுதியில் பாஜக தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.