Bus transport started after 8 days across Tamil Nadu

போக்குவரத்துத் தொழிலளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவு முதலே அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்தபடி சென்னையில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.

ஊதிய உயர்வு, ஓண்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4-ந்தேதி முதல் போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் மாநிலம் முழுவதும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.



போராட்டம் காரணமாக பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் வெறிச்சோடி இருந்ததால் சிறப்பு பஸ் இயக்கப்படாமல் போய்விடுமோ? என்று பயணிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பினர். நள்ளிரவுமுதலே சுறுசுறுப்பாக தங்கள் வேலையைத் தொடங்கினர். இதையடுத்து பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருந்தன. எந்த நடைமேடையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் செல்லும் என ராட்சத பலகை மூலம் தெரியப்படுத்தப்பட்டன. மேலும் சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.



சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் நஙளளரவு முதலே ஓரளவு அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்று வழக்கத்தை விட பயணிகள் சிரமம் ஓரளவு குறைந்தது.

ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து இரவு முதல் வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.



பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த 4 ஆம் தேதி முதல் பெரும் சிரமத்தில் இருந்த பொதுமக்களும், பயணிகளும் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர், வழக்கம்போல இந்த ஆண்டும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாட உற்சாகமாக பேருந்துகளில் கிளம்பிச் செல்கின்றனர்