Bus strike continues today also

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடர்வதால் பொது மக்களும், பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.



ஆனால் தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதை வலியுறுத்தி கடந்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி காணப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை தொழிற்சங்க உறுப்பினர்களிடம் அவ்வப்போது கேட்டபடி இருந்தனர்.

மாலை 6 மணியை கடந்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சில ஊழியர்கள் விரக்தி அடைந்தனர். பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்து விடுமோ? என்று கவலையும் அடைந்தனர்.



இந்தநிலையில் அமைச்சருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் ஆவேசமடைந்த பெரும்பாலான டிரைவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.

கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், பஸ்கள் இயக்கப்படாமல் அணிவகுத்து நின்றன. பஸ்சில் ஏறிய பயணிகளிடம், பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயங்குவது நிறுத்தப்பட்டது. அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

எனவே பேச்சுவார்த்தையில் இருந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ ‘ஸ்டிரைக்’ அறிவிப்பை நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டனர். இதையடுத்து இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.பஸ்சில் இருந்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.


வெளியூர் செல்லும் பெரும்பாலான பஸ்களும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டது. அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்சில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டது.

இன்று காலை முதல் பஸ்கள் இயங்கும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால் சென்னை கோயம்பேடு மதுரை,திருச்சி,கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டம் தொடர்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.