சீமானின் இந்த பேச்சை பகுத்தறிவு உள்ளவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்கலாம் அது நாகரீகமாக இருக்க வேண்டும், எருமை மாடு உடன் ஒப்பிட்டு பேசுவது திராவிடத்தை கொச்சைப்படுத்துவது ஆகும். சீமானுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என எச்சரித்துள்ளார். 

திராவிடத்தை எருமை மாட்டுடன் தொடர்பு படுத்திய சீமான் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சீமானின் பேச்சுக்கள் தொடர்ந்து திராவிடத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்துவருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு குறித்து சீமான் எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது அப்படியெனில் அதையும் திராவிடர் என்று கூறலாமா? என நக்கலடித்திருந்த நிலையில் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு முன்னுரை எழுதியுள்ளார். அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் என்ன கனவு கண்டாரோ அவைகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார், அம்பேத்கரின் சிந்தனைகளை மோடி செயல்படுத்தி வருகிறார், மோடியும் அம்பேத்கரும் எனக்கு மிகவும் பிடிக்கும் , இன்று அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியே பாராட்டி இருப்பார் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடலாமா? இது அம்பேத்கருக்கு அவமரியாதை இல்லையா? சட்டமேதை டாக்டர் அம்பேத்கரும் மோடியும் ஒன்றா? என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் இளையராஜா முழுவதும் ஆர்எஸ்எஸ்க்கு அடியாளாகிவிட்டார், கருப்பு பணம் அதிகம் சேர்ந்து விட்டதால் தனக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் பாஜகவுக்கு ஆதரவாகவும், மோடியை தூக்கிப் பிடிக்கவும் துணிந்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடற்கரையில் கருப்பு நிற உடையணிந்து நிற்கும் தனது புகைப்படத்துடன் கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு தந்தை இளையராஜாவுக்கு பதிலடி என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவை பலரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்று திராவிடன் என சொல்லட்டும் அல்லது தமிழன் என்று சொல்லட்டும் ஆனால் யுவன்ஷங்கர்ராஜா இரண்டையும் சேர்த்து சொல்கிறார். கருப்பு திராவிடன் என பதிவிட்டுள்ளார், எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா என நக்கல் அடித்தார். மேலும் யுவன்சங்கர்ராஜா சின்னப் பையன் அவருக்கு புரிதல் இல்லை என்று சீமான் யுவனை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீமானின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது அதற்காக எருமை மாடு திராவிடனாக முடியுமா என சீமான் விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

சீமானின் இந்த பேச்சை பகுத்தறிவு உள்ளவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்கலாம் அது நாகரீகமாக இருக்க வேண்டும், எருமை மாடு உடன் ஒப்பிட்டு பேசுவது திராவிடத்தை கொச்சைப்படுத்துவது ஆகும். சீமானுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என எச்சரித்துள்ளார். மேலும் பேசிய அவர் நீட் தொடர்பாக முதலமைச்சர் எப்போது பார்த்தாலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவார், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று? அனைத்துக்கட்சி கூட்டதே ஆளுநர் மீது பழி போடுவதற்குதான், ஆளுநருக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் ஆளுநரை புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.