தமிழகத்தை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை... கே.எஸ்.அழகிரி வரவேற்பு!!
தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து இரண்டாவது முழு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்து தமிழகத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியிருக்கிறார். 2014 இல் ஏறத்தாழ 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு ஆட்சிப் பொறுப்பேற்று தற்போது வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு, கடன் தொகையை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து திறன்மிக்க நிதி மேலாண்மையை செய்திருக்கிற நிதியமைச்சரை பாராட்டுகிறேன். ஏறத்தாழ ரூபாய் 3 லட்சம் கோடி செலவிடக் கூடிய நிதிநிலை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியவாறு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?
இதற்காக ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 58 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைய இருக்கிறார்கள். சொல்லாததையும் செய்வோம், சொன்னதையும் செய்வோம் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியது இந்த அறிவிப்பின் மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையொட்டி எதிர்கட்சிகள் செய்த அவதூறு விமர்சனத்தை பார்க்கிற போது, அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பது நிரூபணமாகியிருக்கிறது. பொதுவாக நிதிநிலை அறிக்கையில் பெண்கள் கல்வி, உயர்கல்வி, சுய தொழிலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு சுய சார்போடு பெண்கள் வாழ்வதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 30,000 கோடி கூடுதலாக கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அறிவிப்புகள் வேலை வாய்ப்புகளை பெருக்குவதோடு, மகளிர் முன்னேற்றத்தில் தமிழக அரசு அளிக்கிற முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடியும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 9 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சசிகலா, டிடிவி.தினகரனுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்? பெரியகுளத்தில் வைரலாகும் பேனரால் பரபரப்பு..!
இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைய வாய்ப்பு இருக்கிறது. மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கிடையே விவசாயிகள் கடன் தொகை ரூபாய் 2393 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் சேலத்தில் ஜவுளி பூங்கா 119 ஏக்கரில் அமைக்க ரூபாய் 850 கோடியும், மூன்று மாவட்டங்களில் புதிய சிப்காட் அமைக்கவும், பத்திரப் பதிவு கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்திருப்பதும் மிகுந்த வரவேற்புக்குரியது. ரூபாய் 77 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மக்களிடையே புதிய நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை!!
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகள் 85 சதவிகிதம் 22 மாதங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எஞ்சியிருக்கிற வாக்குறுதிகளும் நிறைவேற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலைகள், மின்வசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டதால் முதலீடுகளுக்கு உகந்த முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அதன்மூலம் தமிழகத்தில் முதலீடுகள் குவிந்ததால் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருமளவில் ஏற்பட்டு வருவது தமிழக மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.