அக்டோபர் 7ம் தேதி யார் முதல்வர் வேட்பாளர் என்கிற பட்டிமன்றம் அதிமுகவுக்குள் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இரு தரப்பிலும் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரித்தோம். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தானே வர வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார். எடப்பாடிக்காக அமைச்சர்கள் சிலர் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் எடப்பாடி ஆதரவு நிலையில் இருக்க, பழைய மாசெக்களை எடப்பாடி தரப்பினர் தொடர்புகொண்டு வருகிறார்கள். சில நிர்வாகிகள் தன் மேல் அதிருப்தியில் உள்ளதாக அறிந்த எடப்பாடி, அவர்களின் பட்டியலை வாங்கி வைத்து தானே அவர்களுக்கு போன் போட்டுப் பேசி சமாதானப்படுத்தி விட்டார்.

 

அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பல மாசெக்களையும் தொடர்புகொண்டு பேசி வருகிறார். இப்படி இரு தரப்பிலும் தத்தமது ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் தீவிரமாக இருக்க துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் இதையெல்லாம் கவனித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆதரவு திரட்டும் அணுகுமுறையில் எடப்பாடி தரப்பு சற்று வலுவாக இருப்பதை உணர்ந்த கேபி.முனுசாமியும், வைத்திலிங்கமும் ஓ.பி.எஸிடம் “அதிகாரமும், பணமும் அவரிடம் இருக்கிறது. அதிகம் செலவு பண்ணவும் அவர் தரப்பில் தயாராக இருக்கிறார்கள். 

நிலைமை இப்படி இருக்கும்போது எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு சம்மதம் சொல்வது நல்லது. சசிகலா ரிலீசாகிற இந்த நேரத்தில் நீங்க ரெண்டு பேரும் எதிரும்புதிருமாக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல’’எனக்கூறி இருக்கிறார் முனுசாமி.

 

இதற்கிடையே பாஜக தரப்பில் இருந்தும் அதிமுகவில் எடப்பாடியையும், ஓ.பன்னீரையும் சிலர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எடப்பாடியிடம் பேசிய தமிழக விவகாரங்களை கவனிக்கும் பியூஸ் கோயல், ‘போன 18 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் உங்க ரெண்டு பேருக்குமான பிரச்சினை டெல்லி மீடியா வரைக்கும் செய்தி ஆகியிருக்கு. நேற்று நடந்த பொதுக்குழுவும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரச்சினை எதுவும் உண்டாக்குற மாதிரி நடந்து கொள்ள வேண்டாம். அது எதிரிகளுக்கு சாதகமாகி விடும்’’எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ் தான் தியானம் இருந்தபோது தன்னுடன் வந்த ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார். ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்தாலும் பொதுக்குழுவில்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசிய நத்தம் விஸ்வநாதன் முன்பே ஓ.பிஎஸிடம் தனது நிலையை விலக்கிக் கூறியிருக்கிறார். ‘’அண்ணே, இனியும் உங்களை நம்பி வர தயாராக இல்லை. உங்கள் குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்தீர்களே தவிர உங்களை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்தீர்கள். உங்கள் காரியத்துக்காக மட்டும் தான் எங்களை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்கள்’’ என ஓ.பி.எஸிடம் நேரடியாகவே கூறி இருக்கிறார். 

அதேபோல மற்றொரு முக்கிய நிர்வாகியுடன் பேசி இருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு அவரோ, ‘’ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  சசிகலா தலைமையேற்பது பிடிக்கவில்லை. அப்போது உங்களுக்கு ஆதரவாக வந்த பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அனைவருமே சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காகத் தான் உங்கள் பின்னால் வந்தோமே தவிர, தனிப்பட்ட உங்களுக்கான ஆதரவு என நினைத்துக் கொள்ளாதீர்கள். சரி உங்களை நம்பி வந்த எங்களுக்கு என்ன செய்தீர்கள். சசிகலா இப்போது அதிமுகவில் இல்லை. ஆகையால் எடப்பாடியாருடன் சேர்ந்து பணியாற்றுவதில் எங்களுக்கு சங்கடம் இல்லை. 

உங்களை நம்பி வந்த ஆதரவாளர்களையே உங்களால் தக்க வைக்க முடியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி சாதி, மண்டலம் தாண்டிகட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். நீங்களோ உங்கள் மகனை எம்.பி ஆக்கி, மத்திய அமைச்சராக்குவதிலும், தம்பிக்கு ஆவின் பதவி, மைத்துனருக்கு, சம்பத்திக்க்கு என உங்கள் குடும்ப வளத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தீர்கள். இப்படி இருக்கையில், உங்கள் பின்னால் எங்களால் எப்படி வரமுடியும்..?’’என கறாராக தொலைபேசியில் பேசிவிட்டு லைனை துண்டித்துள்ளார். இதையெல்லாம் ஓ.பி.எஸ் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

தென்மாவட்டத்தை மட்டுமே அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுக்க நினைத்த ஓ.பிஎஸுக்கு அதிலும் சறுக்கல். தென்மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள்,அமைச்சர்கள் பலரும் எடப்பாடிக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஆனால், அந்ததென்மாவட்டத்தை தாண்டி, கொங்கு மண்டலத்தில் இருந்தோ, பிற பகுதிகளில் இருந்தோ ஓ.பி.எஸுக்கு யாராவது ஆதரவாளர்களாக இருக்கிறார்களா..? இப்படி தன் சார்ந்த, சமுதாயம் சார்ந்த தொகுதி பிரதிநிதிகளின் ஆதரவையே பெற முடியாத ஓ.பி.எஸ் எப்படி பெரும்பான்மை பலத்தை கட்சியில் நிரூபிப்பார்? என கேள்வி கேட்கிறார்கள் அவருடன் கட்சி உடைந்தபோது ஆரம்பத்தில் பயணித்த நிர்வாகிகள்.

அதே போல் தென்மாவட்டத்தில் 60 தொகுதிகளில் தான் சார்ந்த சமுதாயத்தினரின் வாக்கு தமக்கே என எதிர்பார்த்திருந்தார் ஓ.பி.எஸ். தனது சமுதாயத்தினருக்கு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை அவர். ஆகையால், அந்த சமுதாயத்தைசேர்ந்த அமைப்பினர் எடப்பாடியாருக்கு ஆதரவு கரம் நீட்ட தயாராகி வருவதும் ஓ.பி.எஸ் நினைத்துக் கூட பார்க்க இயலாத ட்விஸ்ட்’’ என்கிறார்கள்.