ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சனையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, இனை பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம்–பா.ஜனதா கூட்டணி வென்றது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியை கைப்பற்றியது.ஆந்திரா பிரிக்கப்பட்டபோது செழிப்பான ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது. மேலும் புதிய தலைநகரை  உருவாக்கவேண்டிய நெருக்கடியும் ஆந்திராவுக்கு ஏற்பட்டது. இதனால் அப்போதைய தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதி அந்த கூட்டணியின் சார்பில் அளிக்கப்பட்டது. 

மத்திய அமைச்சரவையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூவும் ஒய்.எஸ்.சவுத்ரியும் இடம் பெற்று உள்ளனர். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக  பாஜக  தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தெலுங்கு தேசம் அதிருப்தி அடைந்தது. 

இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநில நிதி அமைச்சர்  ராமகிருஷ்ணுடு 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாகவோ, 2014–15–ம் ஆண்டு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதத்தில் நிதி உதவி அளிப்பது பற்றியோ அருண்ஜெட்லி எந்த உறுதி மொழியையும் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர அமைச்சருமான  சந்திரபாபு நாயுடு பாஜக அரசு மீது மேலும் அதிருப்தி அடைந்தார்.இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜூவும், ஒய்.எஸ்.சவுத்ரியும் இன்று  தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார். பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகவும் தீர்மானித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.அமைச்சர்கள் ராஜினாமா முதல் கட்ட நடவடிக்கை என்றும், இனி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தான் தெரிவிக்க முயன்றதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

இதனிடையே ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 பாஜக அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.