திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு கைதானார்.

வரும் 5 ஆம் தேதி திமுக தலைமையில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டவும் திமுக திட்டமிட்டுள்ளது.

இந்த தொடர் போராட்டத்தால் ஆத்திரமடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு ஸ்டாலின்தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர்  ஸ்டாலினின் வீட்டிற்கு நள்ளிரவு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து நள்ளிரவில் கோபாலபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். 

சோதனையில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.