சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 6.50 மணி அளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மிரட்டலில் வெடிகுண்டு விரைவில் வெடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே யார் என்ற விவரம் கேட்பதற்குள், அந்த நபர் இணைப்பைத் துண்டித்து விட்டார். 

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் அபிராமபுரம் காவல்நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீவிரமாக சோதனை ஈடுபட்டனர். இந்த சோதனையில் அது புரளி என உறுதி செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுந்தர்ராஜ் என்பவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.