அரசியல் அறிவியல் படிப்பில் நீங்கள் பெற்ற பட்டத்தை முதலில் காட்டுங்கள், பின்னர் உங்களுடைய தந்தையின் பிறப்புச் சான்றிதழையும் காட்டுங்கள் என்று பிரதமர் மோடியை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்துள்ளார்.


மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், இஸ்லாமியர்கள் உள்பட பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். பாஜக சார்பில் இந்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தப்பட்டுவருகின்றன. டெல்லியில் உள்ள ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டத்துக்கு பாலிவுட் கலைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். நடிகை தீபிகா படுகோனே போராட்டம் நடந்த இடத்துக்கே சென்று ஆதரவு அளித்துவிட்டு வந்தார்.  இதேபோல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.


இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கடுமையாக பாஜகவையும் மோடியையும் விமர்சித்து ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ட்விட்டர் பதிவில், “அரசியல் அறிவியல் படிப்பில் நீங்கள் பெற்ற பட்டத்தை முதலில் காட்டுங்கள், பின்னர் உங்களுடைய தந்தையின் பிறப்புச் சான்றிதழ், பிறகு அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழை காட்டுங்கள். பின்னர் எங்களிடம் ஆவணங்களை கேளுங்கள்” மோடியை விமர்சித்துள்ளார்.
மேலும் “முதலில் எழுதவும், படிக்கவும் தெரியுமா என்பதை நிரூபிக்கட்டும். அதன் பிறகு பேசலாம். அவர்களுக்கு (அரசுக்கு) பேசத் தெரிந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். அவர்களால், சரிபார்க்கப்பட்ட ஒரு கேள்வியை கூட எதிர்கொள்ள முடியாது. அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்றவை கொடுமைப்படுத்துவதற்கு சமம்” எனவும் கடுமையாக சாடி அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.