டிடிவி தினகரனை நம்பிச் செல்பவர்கள் நடுத்தெருவில் தான் நிற்பார்கள் என்று கடந்த மூன்று வருடங்களாகவே எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று அவரது ஆதரவாளர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீடு முன்பு நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தனர்.

சசிகலா வந்த பிறகு அதிமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டு மறுபடியும் தான் அதிகாரத்திற்கு வருவது உறுதி என்றே இதுநாள் வரைதனது ஆதரவாளர்களிடம் டிடிவி தினகரன் கூறி வந்தார். இதனை நம்பி மறுபடியும் அதிமுகவில் பதவிக்கு வந்துவிடலாம் என அவரது ஆதரவாளர்கள் தீயாய் வேலை செய்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலாவிற்கு பெங்களூர் முதல் சென்னை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னணியில் முழுக்க முழுக்க தினகரனின் அமமுக நிர்வாகிகள் தான் இருந்தனர். ஆனால் சென்னை வந்த பிறகு சசிகலா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.

இது குறித்து நிர்வாகிகள் கேட்டபோதெல்லாம் சின்னம்மா கொரோனா குவாரண்டைனில் உள்ளார் என்று கூறி சமாளித்து வந்தார் டிடிவி. ஆனால் ஜெயலலிதா பிறந்த தினத்தன்று பல்வேறு தரப்பினரை சசிகலா சந்தித்த பிறகு தினகரானல் அந்த காரணத்தை கூற முடியவில்லை. உடனடியாக அமமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைய உள்ளது, சசிகலா தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றெல்லாம் அறிவித்தார் தினகரன். சரி அதிமுகவில் மறுபடியும் செல்ல முடியவில்லை என்றால் அமமுகவில் தேர்தலில் போட்டியிட்டாவது வெற்றி பெற முயற்சிக்கலாம் என நிர்வாகிகள் முடிவுக்கு வந்தனர்.

ஆனால் அவர்களின் இந்த முடிவில் பேரிடியாய் வந்து விழுந்தது சசிகலாவின் அரசியல் துறவரம் அறிவிப்பு. சசிகலாவின் இந்த அறிக்கையை டிவியில் பார்த்தது முதல் அமமுக நிர்வாகிகள் பலர் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். சசிகலாவையும், தினகரனையும் நம்பித்தான் கடந்த நான்கு வருடங்களாக கை காசை போட்டும், கடன் வாங்கியும் செலவு செய்து கொண்டிருந்தோம், ஆனால் சின்னம்மா இப்படி அறிவித்த பிறகு தங்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் உள்ளது? என நிர்வாகிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அத்துடன் நிர்வாகிகள் அனைவரும் தினகரன் தரப்பை தொடர்பு கொள்ள வழக்கம் போல்அவர்கள் நாட் ரீச்சபிள் நிலைக்கு சென்றுவிட்டனர்.

தினகரனை நம்பி ஏற்க சுமார் 18 எம்எல்ஏக்கள் நடுத்தெருவிற்கு வந்தனர். இருந்தாலும் நம் ஜாதிக்காரர், சசிகலா வந்த பிறகு ராஜதந்திரமாக ஏதாவது செய்வார் என்கிற நம்பிக்கையில் தான் அமமுகவிற்காககடுமையாக உழைத்தோம், ஆனால் சசிகலா இப்படி அறிவித்த பிறகு இனி நமக்கு என்ன அரசியல் எதிர்காலம் உள்ளது எனவும் அமமுக நிர்வாகிகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். அத்துடன் நேற்று காலை சுமார் 6 பேர் திடீரென சசிகலா வீட்டிற்கு முன்பு வந்தனர். அவர்கள் அங்கிருந்த சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்தனர்.

என்ன ஏன் தர்ணா என அவர்கள் ஆறு பேரிடம் விசாரித்த போது சசிகலா தனது அரசியல் விலகல் முடிவை கைவிட வேண்டும் என்று கூறினர். அத்தோடு தமிழகம் முழுவதும் இருந்து சசிகலா ஆதரவாளர்கள் புறப்ப்டடுள்ளதாகவும் மாலைக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு கூட உள்ளதாகவும் கூறி பீதி கிளப்பினர். இதனை உண்மை என்று நம்பி போலீசாரும் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டனர். ஆனால் நண்பகல் 12 மணி ஆகும் மொத்தமே அங்கு 15 பேர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். பிறகு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு ஒவ்வொருவராக புறப்பட்டு தலைமறைவாகினர்.

இதனை சுட்டிக்காட்டிய அதிமுக நிர்வாகிகள் சின்னம்மா, சின்னம்மாஎன்று கூறிக்கொண்டு டிடிவி பின்னால் சென்றவர்கள் ஏற்கனவே நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர். தற்போது இருப்பவர்களும் வந்துள்ளனர், தவறை உணர்ந்து மறுபடியும் அதிமுகவிற்கு வந்தால் கூட இவர்களக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டே சென்றனர்.