தமிழ் கடவுள் முருகப் பெருமானையும் கந்த சஷ்டிக் கவசத்தையும்  இழிவுபடுத்திய சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இது கருப்பர் கூட்டம் ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப்  சேனலில் வெளியான வீடியோ, தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அந்த  யூடியூப் சேனலையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூட்யூபில் பதிவிட்டதாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  அதில் கருப்பு கூட்டம் யூடியூப் சேனல் உரிமையாளர் செந்தில் வாசன் என்பவரை வேளச்சேரியில் வைத்து  போலீசார் கைது செய்தனர்.  மற்றொரு நபரான சுரேந்திரன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார், ஆனால் தமிழகத்தில் அவருக்கு எதிராக போராட்டம் வலுத்ததையடுத்து, சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மொத்தத்தில்  கூண்டோடு கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் காவலில் எடுத்து விசாரித்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சுரேந்திரன் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

முன்னதாக தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், முருகனை இழிவுப்படுத்திய அந்தச் சேனலை தடை செய்ய வேண்டும் என்பதுடன், அதில் சம்பந்தபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில் கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.  சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்,  கள்ளச்சாராயம், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், நில அபகரிப்பு,  மணல் கடத்தல், திருட்டு வீடியோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இந்த சட்டம் பாய்ச்சப்படுகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இந்த சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய காவல் துறைக்கு இந்த சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடதக்கது..