பாஜகவுக்கு ஆதரவாக இந்திய ஃபேஸ்புக் நடந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறிவருகிறது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஷுக்கர்பர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி புகார் கடிதம் எழுதியது. தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொண்டதற்காக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிவருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியையும் மூத்த அமைச்சர்களையும் ஃபேஸ்புக்கில் அவதூறாக செய்தி பரப்புவதற்கு இந்திய ஃபேஸ்புக் துணைபோவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.


இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஷுக்கர்பர்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் மீது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அவதுாறு பரப்புகிறார்கள். இந்தியாவில் பணியாற்றும் ஃபேஸ்புக் அதிகாரிகள் இதற்கு துணை போகிறார்கள். இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஃபேஸ்புக் பக்கங்கள் பல அழிக்கப்பட்டன. இந்தப் புகார்களுக்கு பதிலும் அளிக்கவில்லை. உண்மைக்கு மாறான செய்திகளை மட்டும் வெளியில் கசிய விடுகிறார்கள்.


சமூக  நல்லொழுக்கத்தைச் சீர்குலைப்போர், வன்முறைக்கென ஆட்களை நியமித்து ஃபேஸ்புக் வாயிலாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். இந்திய அரசியலை ஸ்திரமின்மையாக மாற்ற வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம் ஆகும். இந்தக் குறைபாடுகளை ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்க வேண்டும்” என்று அதில் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவை குற்றம் சாட்டிவந்த நிலையில், தற்போது பாஜகவும் அதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆனால், உண்மை என்னவோ..?