மதுரை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்து இறங்கியிருக்கும் மோடிக்கு, கலகக்காரர் தம்பிதுரை புத்தகம் பரிசளித்து வரவேற்றிருக்கிறார். ’அடங்காம பேசுறது, ஆனா ஆளைப் பார்த்ததும் மடங்குறது’ என்று தம்பியை தாறுமாறாக முறைத்தபடி அவருக்கு அருகில் கையில் ரோசாபூவை வைத்துக் கொண்டு நின்றார் பொன்னார். 

மோடி வருகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு தம்பிதுரை ‘சைலன்ட் மோடில் இருப்பார். நமக்கு சிக்கல் இல்லை.’ என்று தமிழக பி.ஜே.பி.யினர் கனா கண்டிருந்தனர். ஆனால் அதில் ஒரு குடம் சுடுதண்ணீரை தூக்கி ஆவி பறக்க ஊற்றியிருக்கிறார் மாஜி அமைச்சரும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளருமான பொன்னையன். ஒரு தனியார் எஃப்.எம். நடத்திய நேர்காணல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கும் அவர், பி.ஜே.பி.க்கு எதிராக மைக்கில் மிரட்டியிருக்கிறார் இப்படி...

“எங்களை பி.ஜே.பி.யின் அடிமை என்று அவதூறாக விமர்சிக்கிறார்கள். மாநில அரசு என்பது மத்திய அரசை நம்பித்தான் செயல்பட வேணிட்யுள்ளது. தமிழகத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் மத்திய அரசுடன் எங்கள் அரசு இணக்கமான உறவை பேணி வருகிறது. இது புரிந்தும் புரியாதது போல் பேசுகின்றனர் எதிர்கட்சிகள். 

அரசியல் ரீதியாக பி.ஜே.பி.யுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் அவர்கள் வெறும் ஜீரோ மட்டுமே. தேர்தல்களில் அவர்களுக்கு தமிழகத்தில் ஒரு இடம்  கூட கிடைக்காது. பி.ஜே.பி.க்கு ஒரு வேளை ஒன்றிரண்டு வெற்றிகள் கிடைத்தாலும் கூட அது கூட்டணி கட்சிகள் போடும் பிச்சையே!” என்று பொளந்துள்ளார் பொன்னையன். 

இந்த விஷயம் பி.ஜே.பி.யின் கவனத்துக்கு போய்விட்டது, ஆனால் மோடி வந்திருக்கும் நிலையில் இது பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அமைதி காப்பவர்கள், பிரதமர் சென்ற பின், “உங்களுக்கு தெரியாமலா பொன்னையன் இப்படி பேசுகிறார். எல்லாம் உங்கள் அனுமதியோடுதான் நடக்கிறது. இருக்கட்டும் கவனிக்கிறோம் உங்கள் டீமை.” என்று முதல்வரிடம் கடுமையாக எகிற முடிவெடுத்துள்ளார்கள்.