ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம்  ஆகிய 3 மாநிலங்களிலும் நீண்ட காலமாகவே பாஜக-தான் ஆட்சி நடத்தி வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இந்த 3 மாநிலங்களில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பாஜக துடித்துக் கொண்டி ருக்கின்றது.

ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம், பயிர்க் காப்பீட்டு திட்டத் தோல்வி, வியாபம் ஊழல், மகளிருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை, விலைவாசி உயர்வு இவையெல்லாம் பாஜக-வுக்கு மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

இதனால், எப்போதும் போல சமூகவலைத்தள பிரச்சாரம் மூலம் தப்பித்து விடலாம் என்று பாஜக கணக்கு போட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாநிலங்களில் உள்ள 56 மாவட்டங் களுக்கும் தலா 11 பேர் விகிதமும், 838 மண்டலங்களுக்கும் தலா 6 பேர் விகிதமும், 65 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் தலா ஒருவர் என்ற அடிப்படையிலும் பல ஆயிரம் பேர்களை சமூக வலைத் தளங்களில் பாஜக இறக்கி விட்டுள்ளது.

ஆனால், பாஜக எவ்வளவு முயன்றாலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் வெற்றிபெற முடியாது என்பதையே ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் கருத்துக் கணிப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இங்கு கடந்தமுறை 163 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்தமுறை பாஜக-வுக்கு 57 இடங்களுக்குமேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த தேர்தலில் 21 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ், இந்தமுறை 130 இடங்கள் வரை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.இங்கு பாஜக-வின் வாக்கு சதவிகிதம் 42.2 சதவிகிதத்திலிருந்து, 36.8 சதவிகிதமாக குறைந்துள்ளது.காங்கிரசின் வாக்கு சதவிகிதம் 33.1 சதவிகிதத்திலிருந்து 50.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கரிலும் இதேபோன்ற நிலைமைதான் கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது. 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கரில், கடந்த தேர்தலில் 49 இடங்களைப் பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 39 இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால், எதிர்வரும் தேர்தலில் பாஜக-வுக்கு 33 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், அதேநேரம் காங்கிரஸ் 54 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மற்றொரு முக்கிய மாநிலம் மத்தியப்பிரதேசம். இங்கு மொத்தம் 230 இடங்கள் உள்ளன. இதில், கடந்த தேர்தலில் பாஜக 165 இடங்களைப் பிடித்து, ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் 58 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. வருகின்ற தேர்தலில் இந்த நிலைமையும் மாறுகிறது. பாஜக 107 இடங்களைப் பெறும் நிலையில், காங்கிரஸ் 117 இடங்களை அள்ளும் என்று கூறப்படுகிறது.

வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை, சத்தீஸ்கரில் 41 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகித மாக பாஜக வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 44.9 சதவிகிதத்திலிருந்து 40.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஏபிபி - சிவோட்டர் வெளியிட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக-வினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.