அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசும்போது, “வருகிற தேர்தலில், பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள்” என உறுதிபட தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார். அதேவேளையில் கட்சியினருக்கு பல ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமித்ஷா பேசும்போது, “தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள். ஒவ்வொரு பூத் கமிட்டியையும் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். இப்போதிலிருந்து தொடர்ந்து பணியாற்றினால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வர முடியும்.” என்று பேசியிருக்கிறார். மேலும் பல ஆலோசனைகளையும் அமித்ஷா வழங்கியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.