மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்யாக பிரசாரம் செய்துவருகின்றன. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பலன்களை தரும். விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியும். எனவே உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்கள்.


திமுக மொழிக்கொள்கையிலும் இப்படித்தான் நாடகமாடுகிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் எல்லாம் மும்மொழிகளைக் கற்பிக்கிறார்கள். பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தது பாஜகத்தான். இதற்காக மாநில அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு விரைவில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கு திமுக ஒருபோதும் பாதுகாப்பாக இருந்ததில்லை. இலங்கைப் படுகொலைகளுக்கு திமுகதான் காரணம். இந்த துரோகங்களை மக்கள் மறக்கவில்லை. எனவே, தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திமுகவில் உள்ள பெண் எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டிக்காமல் மற்ற பெண்களுக்காக கனிமொழி குரல் கொடுப்பது வேடிக்கையானது.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.