விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி தொகுதி திமுக  உறுப்பினர் ராதாமணி கடந்த ஜுன் மாதம் மரணமடைந்தார். நாங்குனேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டதையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த இரண்டு தொகுதிக்கும் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதி திமுகவுக்கும், நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்திவிடவேண்டும் என்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் மாஸ்டர் பிளான். அதன்படிதான் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டுவருகிறது. ஆனாலும் தனக்கு இந்த நேரத்தில் காங்கிரஸின் உதவி தேவை என்பதால் ஸ்டாலினே நாங்குநேரியை காங்கிரசுக்குக் கொடுக்க முடிவு செய்துவிட்டார்.

திமுகவில் இப்படி என்றால் அதிமுக கூட்டணியில் இன்னும் ஒரு நகர்வு தீவிரம் அடைந்திருக்கிறது. அது என்னவென்றால் நாங்குநேரி தொகுதியை பாஜக குறிவைத்திருக்கிறது. இதற்கான முன்னெடுப்புகளை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என அவர் வாலண்டியராக சொல்லி இருக்கிறார்.

வேலூர் மக்களவைத் தேர்தலின் போதெல்லாம் அதிமுக கூட்டணி பற்றி பெரிதாகப் பேசாத பாஜக, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, ‘நாங்கள் அதிமுக கூட்டணியின் அங்கம்’ என்று சொல்லியிருப்பதன் அர்த்தமே நாங்குநேரியில் பாஜக போட்டியிட விரும்புகிறது என்பதுதான் என பாஜகவினர் பேசி வருகின்றனர்..

தென் மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி பெற்றிருப்பதாக நினைக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் தாங்களே நாங்குநேரியில் நின்று மத்திய, மாநில ஆளுங்கட்சி பலத்துடன் வெற்றிபெற்றுவிடலாம் எனத் திட்டமிடுகிறார்கள். 


 
ஆனால் இதற்கு அதிமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்பது மில்லியின் டாலர் கேள்வி ? ஏனென்றால் பாஜகவின் எண்ணத்தை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.