Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியை பிடிக்க முடியாது என்ற விரக்தியில் தமிழகத்தை துண்டாட நினைப்பதா.? பாஜகவை விளாசிய கே. பாலகிருஷ்ணன்!

தமிழ்நாட்டில் தங்களால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற விரக்தியில் தமிழ்நாட்டை துண்டாடத் துணிந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

BJP wants divide the Tamil Nadu? K. Balakrishnan slam BJP's Nainar Nagendran.!
Author
Chennai, First Published Jul 6, 2022, 9:45 PM IST

நெல்லையில் பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் நிர்வாக வசதிக்காக  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது போல் மாநில அரசின்  நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும்.  அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

BJP wants divide the Tamil Nadu? K. Balakrishnan slam BJP's Nainar Nagendran.!

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்” என்றும் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா மாநில சுயாட்சியை வலியுறுத்தி  பேசியதற்குப் பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு, மொழி வழியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தைத் துண்டாடுவோம் என்றும், அதற்கான அதிகாரம் எங்களுக்கு உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனித் தமிழ்நாடு கேட்பீங்க.. ஐந்தே நிமிடத்தில் திமுக ஆட்சி இருக்காது.. பாஜக பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை!

இந்தியாவின் பன்மைத்தன்மையைச் சிதைத்து மாநிலக் கட்டமைப்பை உடைத்து, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அளவில் குவிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டம். மொழிவழி மாநிலம் என்ற கோட்பாட்டையே ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஏற்பதில்லை. மாநிலங்களைத் துண்டுத் துண்டாக சிதைக்க வேண்டும் என்பதே அவர்களின் சதித் திட்டமாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு அதற்கு ஏதுவாகவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, இந்திய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

BJP wants divide the Tamil Nadu? K. Balakrishnan slam BJP's Nainar Nagendran.!

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மொழி வழி மாநிலம் என்ற முழக்கம் எழுந்தது. விடுதலைக்குப் பிறகு, மொழி வழி அடிப்படையில் தமிழ்நாட்டை உருவாக்கவும், அதற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டவும் நடந்த போராட்டங்கள், தியாகங்கள் ஏராளம். மொழிவழி மாநிலங்களின் அடிப்படையில்தான் இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும். பாஜகவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். இதற்கேற்பவே நயினார் நாகேந்திரனின் விபரீதப் பேச்சு அமைந்துள்ளது. தமிழ் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுக்கு எதிராக உள்ள பாஜக, இப்போதுள்ள தமிழ்நாட்டில் தங்களால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற விரக்தியில் தமிழ்நாட்டை துண்டாடத் துணிந்து விட்டது.

இதையும் படிங்க: பழங்குடி இனத்தவரை அடித்து துவைப்பதுதான் சமூக நீதியா.. திமுகவை திணற திணற அடிக்கும் அண்ணாமலை.

இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜக ஆட்சியை பிடிக்கவும், பிடித்த இடங்களில் ஆட்சியைத் தக்க வைக்கவும், மத அடிப்படையில் மக்களை பிரிப்பது, மாநிலங்களை பிரிப்பது, கட்சிகளை உடைப்பது போன்ற ஜனநாயக விரோத யுக்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜக-வின் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.” என்று அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios