தனித் தமிழ்நாடு கேட்பீங்க.. ஐந்தே நிமிடத்தில் திமுக ஆட்சி இருக்காது.. பாஜக பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை!
திமுக தனித் தமிழ்நாடு கேட்டால், அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசியலமைப்பு சாசனம் பிரிவு - 356-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம் என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி. சூர்யா எச்சரித்துள்ளார்.
நாமக்கல்லில் கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற இந்த மாநாட்டில், திமுக எம்.பி.யும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் ஆ. ராசா பேசியது சர்ச்சையானது. இந்த மாநாட்டில் ஆ. ராசா பேசுகையில், “மாநில சுயாட்சிக்கு உருவம் கொடுத்தவர் அண்ணா. 1974இல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வராமல் மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்கும் தீர்மானத்தை கருணாநிதி எழுதினார். அதைத்தான் சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டுவந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட இந்திரா காந்தி, இதுபற்றி முழுமையாக ஆராய்வோம் என்று பதில் கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: மாநில சுயாட்சி இல்லையென்றால் !! தனி தமிழ்நாடு கேட்போம்.. ஸ்டாலின் முன்னிலையில் மிரட்டல் விடும் ஆ.ராசா..?
மாநில சுயாட்சிக்கு கருவாக இருந்தவர் அண்ணா என்றால், அந்த கருவை உருவமாக மாற்றியவர் கருணாநிதி. ஆனால், 1974இல் கொண்டுவரப்பட்ட அந்த உருவத்துக்கு இன்றுவரை உயிரில்லை. தனித் தமிழ் நாடு கோரிக்கையை தள்ளி வைத்துவிட்டுதான் திமுக மாநில சுயாட்சிக்கு வந்தது. ஆனால், பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டு போராடினார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிற நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே (பெரியார்) ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கு மெத்தப் பணிவன்போடு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை ஓயமாட்டோம்” என்று ஆ. ராசா பேசினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜகவா... ? வாய்ப்பு இல்லை ராஜா.. அமித்ஷாவையே ஆடவிட்ட வைகை செல்வன்
ஆ. ராசா பேசிய காணொளி காட்சியும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. ஆ. ராசாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றத் தொடங்கினர். ‘முதல்வர் ஸ்டாலின், ஆ. ராசாவைக் கண்டிக்கவில்லை என்றால், அவருடைய பேச்சு திமுகவின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும்’ என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆ. ராசாவின் பேசுக்கு தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்,ஜி. சூர்யா, திமுகவை எச்சரித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தனி தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள் - ஆ.ராசா. கேட்டுதான் பாருங்களேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசியலமைப்பு சாசனம் பிரிவு - 356-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படி கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்.” என்று எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை