அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் தனித்து களத்திற்கு வந்திருக்கும் பாஜகவிற்கு தேர்தல் பிரச்சாரம் எந்தளவுக்கு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர், அமமுக, எஸ்டிபிஐ, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளோடு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாது தங்கள் வார்டுகளில் அதிக செல்வாக்குள்ள பலரும் கட்சிகளில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கி பலம் பொருந்திய அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் உள்ளது.. எப்படியும் வாக்குகள் பிரியவே செய்யும். இது பாஜக தலைவர்களும் உணராமல் இல்லை. பாஜகவுக்கு தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில் தான் ஓரளவு ஆதரவு உள்ளது.. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடந்தாலும், இதில், கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் இருக்கின்றன.இதில் எத்தனை இடங்கள் பாஜக வெல்லப்போகிறது என்று தெரியவில்லை.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், இப்போதைக்கு திமுகவுக்கு வாய்ப்பு அதிகம். அடுத்தபடியாக நாம் தமிழருக்கு இங்கு வாக்கு சதவீதம் ஓரளவு கிடைக்கலாம். அதற்கு பிறகுதான் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும். கோவையில் அதிமுக தோற்றால் அது வேலுமணியின் தோல்வியாக பார்க்கப்படும். திமுக தோற்றால் அது செந்தில்பாலாஜியின் தோல்வியாக பார்க்கப்படும். மற்றபடி பாஜகவை போட்டியாக கருதப்பட முடியாது.

ஆனால், எந்த அளவுக்கு இங்கு வாக்கு வங்கியை தனித்து பெறுகிறது என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு நகர்ப்புற மக்கள் மத்தியில் ஓரளவு ஆதரவும் பெருகி வருவதை மறுக்க முடியாது. பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கை கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படி கால்பதிக்கப் போகின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது. தமிழக அரசியல் களத்தில் பாஜக எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
